Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, August 21, 2010

தனியாரே வருக! ஏராளம் பெறுக!

சென்னையில் உள்ள அரசு பொதுமருத்துவமனையை சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது.

மாதந்தோறும் ஏழு லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டது அந்த நிறுவனம்.

அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநரே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா?

“சென்னை மருத்துவமனையைப்போல், சென்னையின் மற்ற மருத்துவமனைகளைப்பராமரிக்கும் பணியையும் தனியாருக்கு கொடுக்க இருக்கிறோம். முறையாக செயல்படாவிட்டால் அவர்களுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்”

‘முறையாக செயல்படுவது’ என்பதன் பொருள் என்ன என்பதுதான் நமக்குள்ள ஐயம்.

அரசு செய்யவேண்டிய பணிகளை தனியாரிடம் தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு அரசு வேறு எந்த பணிகளை செய்யப்போகிறதாம்?

ஏற்கனவே, மக்கள் இலவசமாக அனுபவித்து வந்த கல்வித்துறையை தனியாரிடம் தாரைவார்த்துக்கொடுத்துவிட்டு அவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது இந்த அரசு.

இப்போது மருத்துவத்துறையையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு மக்களை வாட்டி வதைக்கப்போகிறது இந்த அரசு.

ஏற்கனவே ‘கலைஞர் காப்பீட்டுத்திட்டம்’ என்னும் பெயரில் ஒரு இன்சூரன்ஸ் ஏஜண்ட் போன்று அரசு செயல்பட்டுவருகிறது.

மக்களின் வரிப்பணத்தில் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் ஓராண்டில் 200 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருக்கிறதாம்.

காப்பீட்டு அட்டையை அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு லாட்டரி சீட்டைப்பார்ப்பதுபோன்று பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன நிலையில் அரசு என்ன செய்யப்போகிறது.

அரசு உட்கார்ந்தே இருக்கிறது. அது எப்போது நிற்கும்? எப்போது நடக்கும்?

Friday, August 20, 2010

கூத்தாட்டம்...கூத்தாட்டம்

திரையரங்குகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை ஒரு நாளேடு இன்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும், பகல் கொள்ளையையும் விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கவேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் காவல்துறை ஆணையாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

சென்னையில் மட்டுமல்லாது, மாவட்டத்தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளிலும் இந்தக்கொள்ளை நோய் பரவிக்கொண்டிருக்கிறதாம்.

அதிநவீனத்திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்துரூபாய் கட்டணத்தில் அமையவேண்டும் என்பது அரசின் நிபந்தனை.

திரைக்குமுன்னால் உள்ள முதல்வரிசைக்கு கட்டணம் 10 ரூபாய்.

அதற்கான டிக்கெட்டுகளை திரையரங்கு நிர்வாகம் தாதாக்களின் உதவியோடு கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டால் கேட்பதற்கு ஆளில்லை.

இந்த திரையரங்குகளில் அரசின் உத்தரவின்படி 100 ரூபாய், 120 ரூபாய் என்று இரண்டே வகையான கட்டணங்கள்தான் வசூலிக்கவேண்டும்.

ஆனால் படத்தில் நடித்த நடிகரின் தரத்திற்கேற்ப திரையரங்கு நிர்வாகம் இஷ்டம்போல் கட்டணம் நிர்ணயித்துக்கொள்கின்றனவாம்.

கட்டணக்கொள்ளை மட்டும் இல்லை.

மினரல் வாட்டர் பாட்டில் 40 ரூபாய்.

பாப்கார்ன் என்னும் சோளப்பொரி 50 ரூபாய்.

சாதாரண காபி 40 ரூபாய்.

வசதியானவர்கள் செலவழித்து சினிமா பார்க்கட்டும். வாங்கித்தின்னட்டும்.

வீட்டில் இருந்து கொண்டுபோகும் நொறுக்குத்தீனிகளுக்கு இந்த திரையரங்குகள் தடைவிதிக்க என்ன அதிகாரம் இருக்கிறது?

1000 ரூபாய் இருந்தால் ஒரு சிறுகுடும்பாம் சினிமாவிற்கு போகலாம்.

இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?

இருக்கவே இருக்கிறது திருட்டு டிவிடி. அதிலென்ன தவறு?

பகுத்தறிவாளர்கள் ஆட்சியில் பகுத்தறிவிற்கு ஒவ்வாத கட்டணமுறை.

அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் திரைப்படத்தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத்தொடங்கிய பின்னர் இந்த மனித உரிமை மீறல்கள் திரையரங்குகளில் அரங்கேறத்தொடங்கியிருக்கின்றன.

தட்டிக்கேட்கும் அதிகாரம் உள்ளவர்கள் ஊமைகளாக இருக்கின்றனர்.

பொதுமக்களின் உதவிக்கு வந்துள்ள மாநில மனித உரிமை ஆணையத்திற்கு பாராட்டுகள்.

Sunday, August 15, 2010

பொறுமைக்கு எல்லையுண்டா?

ஒரு முன்னணி செய்தித்தாளில் வெளியாகி உள்ள தலையங்கம் நாகரிக உலகத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தெரிகிறது.

செய்தி இப்படிப்போகிறது......

நீங்கள் ஒரு முதியவராகவோ, மைனாரிட்டி சாதியைச்சேர்ந்தவராகவோ, ஆள் பலம் இல்லாதவராகவோ இருந்தால்....

உங்களுக்கு சொந்தமாக ஒரு வீடோ, நிலமோ நகரத்தின் முக்கியமான பகுதியில் இருந்தால்.....

ஒரு கூட்டம் அந்த சொத்தை அவர்களுக்கு விற்றுவிடுமாறு உங்களை வற்புறுத்தும்.

நீங்கள் மறுத்தால், சாம, பேத, தான, தண்டம் ஆகிய நான்கு முறைகளிலும் உங்களுக்கு தொல்லை தரும்.

உங்கள் வீட்டுப்பெண்களையும் அந்தக்கூட்டம் அச்சுறுத்தும்.

இறுதியில் விற்றுத்தொலைப்பது என்று முடிவு செய்துவிட்டால் விலையை அந்தக்கூட்டமே நிர்ணயிக்கும்.

50 லட்ச ரூபாய்க்கு விற்றுத்தருவதாக வாக்களித்து, உங்களிடம் அவர்கள் பெயருக்கு ஒரு பவர் பத்திரம் வாங்கிக்கொள்ளும்.

அந்தக்கூட்டம் தன்னுடைய செல்வாக்கைப்பயன்படுத்தி 100 லட்சத்திற்கு அந்த சொத்தை விற்கும்.

நிறைய செலவாகிவிட்டது என்றுகூறி உங்களுக்கு 30 லட்சம் கொடுக்கும்.

20 லட்சம் நடைமுறை செலவுகள் என்று உங்களிடம் கணக்கு ஒப்புவிக்கும்.

இந்தக்கொள்ளையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், இருந்தவர்களும் கூட்டாக இருக்கிறார்களாம். காவல்துறையும் இவர்களுக்கு உடந்தையாம்.

பாவப்பட்ட குடிமகனுக்கு கையை பிசைந்துகொள்வதைத் தவிர வழியில்லை என்கிறது இந்த தலையங்கம்.

ஒவ்வொரு மாவட்ட தலைகளும் அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு கோலோச்சுவதை கட்சித்தலைமைகள் தடுத்து நிறுத்தவேண்டும் என்கிறது இந்த தலையங்கம்.

மக்களின் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்து வாக்குச்சீட்டு என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.